மாதந்தோறும் அன்னாபிஷேகம், சிவனின் பாத தரிசனம் காட்டும் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்
ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் தான் சிவாலயங்களில், ஈசனின் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.
மற்ற நாட்களில் வழக்கமாக நடத்தப்படும் 16 வகை அல்லது 21 வகை அபிஷேகங்கள் நடத்தப்படும்.
ஆனால் மாதந்தோறும் அமாவாசை நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படும் அற்புதமான சிவன் கோவில் ஒன்று தமிழகத்தில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் தான் அது. இங்கு ஒவ்வொரு அமாவாசை நாளிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கம் உள்ளது.
முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை நாளில் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்கள் மோட்சம் பெறுவதற்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றார்கள்
அகால மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் நிலையில் நீண்ட நாட்களாக அவஸ்தைப் படுவோருக்கும் ஆத்ம சாந்தி கிடைக்க இந்த கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் அஜபா நடனம் மற்றும் தன் திருவடி தரிசனத்தையும் சிவபெருமான் காட்டி அருளினார். இதனால் இந்த சிவனுக்கு பதஞ்சலி மனோகரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
சிவ பெருமான் நடனமாடிய போது காட்டிய திருவடி உருத்ரபாதம் என அழைக்கப்பட்டது. இவர் நடனமாடி திருவடி காட்டிய தலம் என்பதால் விளமல் என அழைக்கப்படுகிறது. விளமல் என்றால் திருவடி என்று பொருள்.
சிவனின் உருத்ரபாதத்திற்கு இன்றும் தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த தலம் திருவடி ஷேத்திரம், சிவ பாத தலம் ஆகிய பெயர்களாலும் போற்றப்படுகிறது.
இக்கோவிலின் மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என சன்னதியில் சிவனின் மூன்று வடிவங்களை தரிசிக்கலாம்.
திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும். இங்க சிவனின் திருவடியையும் ஒரே நாளில் தரிசிப்பவருக்கு முக்தி எனப்படும் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இப்பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் மதுரபாஷிணி அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி பிரார்த்தனை செய்து, பள்ளியில் சேர்க்கும் வழக்கம் உள்ளது.
திக்குவாய் பிரச்சனை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது.
தலைதிருப்பிய நந்தி, விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பது, எம சண்டிகேஸ்வரர், இரண்டு ஐராவதங்களுக்கு நடுவில் காட்சி தரும் மகாலட்சுமி என வேறு எங்குமே காண முடியாத அரிய திருக்காட்சிகள் பலவற்றை இத்தலத்தில் காண முடியும்.
திருவாரூர் – தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது.
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி!