உழவாரப்பணி – சிவ புண்ணியங்கள் – விளக்கம்

15.11.25 சனிக்கிழமை காலை 8 மணி அளவில் கரந்தை, சருக்கை கில்லனாப்பா மண்டபம் உழவாரப்பணி

0 539

 

சிவ புண்ணியங்கள்  

“புண்ணியம் பதி புண்ணியம், பசு புண்ணியம் என இருவகைப்படும். பதி(இறைவன்) புண்ணியம் சிவபுண்ணியம் என்றும் கூறப்படும். சிவ புண்ணியம் என்பது சிவபெருமானை நினைத்துச் செய்யும் நற்செயல்களாகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கித் செய்யும் நற்செயல்கள் பசு(உயிர்) புண்ணியம் எனப்படும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முக்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பலன் உண்டு. ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப் பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால் அழிவில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்’ என்கிறது சைவ சித்தாந்தம்.

உழவாரம் 

திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் இருக்கும். இப்படி சிவபெருமான் நால்வருக்கும் ஓர் அடையாளத்தைத் தந்து, அந்த அடையாளத்தின் மூலம் அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை உலகறியச் செய்துள்ளார். இதை வேறு வடிவில் சிந்தித்துப் பார்க்கவும். அதாவது ஒரு கோயில் யாரெல்லாம் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும் என்று சிவனே முடிவு செய்து இந்த நான்கு வகையான மக்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பார்.

  1. ) பொற்றாளம் – இது கோயிலுக்கு தேவையான நிதி அளிப்பவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
  2. ) உழவாரம் – இது கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்பவர்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்
  3. ) செங்கோல் – இது கோயிலை சிறப்பாக நிர்வகிக்கும் தலைவரை குறிக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்
  4. ) திருவாசகம் – இது கோயிலைப் பற்றிய குறிப்புகளை கல்வெட்டுகளாக செதுக்குபவர்கள். இந்நாட்களில் கூற வேண்டும் என்றால் கோயில் சம்பந்தமாக செய்தி வெளியிடுபவர்கள், புத்தகம் வெளியிடுபவர்கள், கோயிலை பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துபவர்கள் இவர்களை எடுத்துக் கொள்ளலாம்

மேற்கூறிய இந்த நால்வர் இருந்தாலே திருக்கோயில் சிறப்படையும் என்பது சிவன் எனக்கு கொடுத்த சிந்தனை கருத்து.

அப்பர் கையில் இருக்கும் இக்கருவி, விவசாயக் கருவிகளுள் ஒன்றாக இருந்துள்ளது. தென்னார்க்காடு மாவட்டமான (தற்போது அரியலூர் மாவட்டம்) திருக்களப்பூர் என்ற ஊரில் விவசாயக் கருவிகளுள் ஒரு கருவியின் பெயர் உழவாரம். இன்றும் அக்கருவிக்கு உழவாரம் என்ற பெயரே இருந்து வருகிறது. இன்று திருக்களப்பூரில் கால்நடைகளுக்கு புல்லை செதுக்க இக்கருவி பயன்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

உழவாரப்பணி 

நாம் ஒரு ஆலயத்திற்குள் செல்லும்போது நம் கண்களில் ஒரு சில ஒழுங்கில்லாத விடயங்கள் தோன்றக்கூடும்.  “ஆஹா இதை சரி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்”, என்று அப்போது நம் மனதில் ஒர் எண்ணம் உதிக்கும். அதன் பொருட்டு நாம் அதை சரி செய்ய முற்படுவது உழவாரப்பணியாகும். உழவாரப்பணி = உழவாரம் + பணி. இப்போது உழவாரம் என்பதை பிரித்து எழுதினால் உழவு + ஆரம் என்று எழுதலாம். இதில் உழவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்போது முக்கியமான அந்த வார்த்தைக்கு வருவோம். அதுவே “ஆரம்”. ஆரம் என்பது வடிவியல் வட்டத்தின் மையத்திலிருந்து அதன் எல்லையில் உள்ள எந்த புள்ளிக்கும் வரையப்படும் நேர்கோட்டு தூரமாகும். இதை நாம் ஆழ்ந்து உள்ளுணர்ந்து திருக்கோயில் வடிவமைப்பிலிருந்து நம் ஞான சக்தி மூலம் சிந்தித்தோமேயானால் இதை பின்வருமாறு கூறலாம். 

அதாவது ஆரத்திற்கு உள்ள மையப் புள்ளியே கருவறை. அந்த கருவறையில் இருந்து கோயிலின் எல்லை எந்த திசைகளில் எல்லாம் செல்கிறதோ, அதுவரை அதன் எல்லைக்கோடு என்று அர்த்தம். இப்போது உழவு + ஆரம் – என்பதின் படி ஆரத்தை உழவு செய்தல். இப்போது உழவு + ஆரம் + பணி – என்பதை மேற்கூறிய விளக்கத்தோடு இணைத்து பார்க்கையில் கோயிலின் கருவறையில் இருந்து அனைத்து இடங்களையும் உழவு செய்யும் பணியே உழவாரப்பணி எனப்படுகிறது. 

உழவு + ஆரம் + பணி

உழவு + ஆரம் + பணி இதில் ஆரம் என்பதற்கு மற்றும் ஒரு அர்த்தமும் உண்டு. அதாவது பெண்கள் தங்கள் கழுத்தில் அணியும் ஒரு வகையான அணிகலன். இந்த ஆரம் என்ற அணிகலன் ஒரே வடிவில் அடுக்கடுக்காக பல ஒன்றோடு ஒன்று கோர்த்து  நின்று அழகு சேர்க்கும். அதுபோல உழவு செய்ய ஆரமாக மக்கள் கூடி இருந்து கோயில்களை சுத்தம் செய்து அழகு படுத்துவது சிறந்த பணி அதுவே உழவாரப் பணியாகும்.

இதுபோன்ற விளக்கங்கள் நமக்கு ஏன் தோன்றவில்லை என்று ஒரு சிலர் எண்ணலாம். நம் உடலை அர்த்தநாரீஸ்வரர் போல் மாற்றி ஒரு பாதி நாமும் மறு பாதி கடவுளுக்கும் கொடுத்தால் மட்டுமே இப்படிப்பட்ட உட்கூட்டு சிந்தனைகள் வெளிப்படும் என்பது என் அனுபவக் கருத்து.

உழவாரப்பணி பயன் 

இவ் உழவாரப் பணியை – இச் சிவபுண்ணியத்தை மேற்கொண்டால் என்ன பயன் கிட்டும் தெரியுமா? 21 தலைமுறைகள் தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும் அவ்வடியார்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அப்பணியில் நம்மை உடலாலும், பிற வகைகளாலும் (பொருள் கொடுத்து உதவி) ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு அப்பரடிகளின் உழவாரத்தை நாமும் கைக்கொண்டு வாழ்வோம்.

 

~~~~~~~இந்த வார உழவாரப்பணி~~~~~~~

வருகின்ற 15.11.25 சனிக்கிழமை காலை 8 மணி அளவில் கரந்தை, சருக்கை கில்லனாப்பா
மண்டபம் 300 வருட பழமையான அருள் சித்தி விநாயகர் ஆலயத்தில்.
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக உழவாரப்பணி நடைபெறும். கலந்து கொள்ள விருப்ப உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

...................பெருங் கோட்டத் தலைவர் மாஸ்டர் சுரேஷ் 98424 48333...................
...................மாவட்டத் தலைவர் K.மகேந்திரன் 89739 45808...................
...................மண்டலத் தலைவர் KRG.ராஜா 93603 24466...................
...................மண்டலப் பொதுச்செயலாளர் S.சக்திவேல் 98943 14126...................
...................மாவட்டத் துணைத் தலைவர் M.சுரேஷ் 78714 10469...................

 

– Dr. ஆ.சி.க. செந்தில்

B,Sc.,(Maths), GNIIT(Software-Multimedia Development), ADCHM, DWD, MAcu., International MBA (IT), Software Testing

நிர்வாக இயக்குனர் – ஆன்மீக மாத இதழ் கோவில் முரசு

 

மேலும் இதுபோன்ற கட்டுரைகள் வேண்டுமா? உங்கள் கருத்துகளை பகிரவும் மற்றும் கோவில் முரசு ஆன்மீக மாத இதழுக்கு சந்தா கட்டி பயன்பெறவும். வருடத்திற்கு வெறும் ரூ.400 மட்டுமே.

Simply scan the QRCODE seen in the below image, complete the payment and subscribe.

Leave A Reply

Your email address will not be published.