தினமும் ஒரு திருமந்திரம்

0 91

ஓம் திரு கம் கணபதியே நம

தினமும் ஒரு திருமந்திரம்.

ஓம் நமசிவாய

திருமந்திரம்

ஏழாம் தந்திரம்
[காலோத்தராகமம்]

9.திருவருள் வைப்பு

1779.
தலையான நான்குந் தனதரு வாகும்
அலையா வருவுரு வாகுஞ் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகுந்
துலையா இவைமுற்று மாயல்ல தொன்றே.

-திருமூலர்.

விளக்கம்:(ப.இ)
தூமாயைக்கண் விளங்கும் அறிவு, ஆற்றல், ஒலி, ஒளி, ஆகிய நான்கும் சிவனுக்குரிய அருவநிலையாகும் ; அருளோனாகிய சதாசிவன் அருஉருவ நிலையாகும் ; ஆண்டான், அரன், அரி, அயன் ஆகிய நான்கு நிலையும் உருவநிலையாகும் ; இவருள் அரன், அரி, அயன் என்னும் மூவரும் உடல்மெய்யாகிய மூலப்பகுதியில் அப் பெயர்களோடு ஆணையால் முத்தொழில்புரியும் மூவரையும் தொழில்படுத்துவோராவர். இம் மூவரும் ஆசான் மெய்க்கண் உறைவோர். தலையளி :தண்ணளி ; பெருங்கருணை. இவ்வகை (மந்திரம் 1776) ஒன்பது திருமேனிகளுடன் இயைந்து இயக்கினும் சிவபெருமான் ஒன்றும் இயைந்திடா இயல்பினனாகியப்பாலுள்ளவனாவன்.

(அ.சி)
தலையான நான்கு – சிவம், சத்தி, நாதம், விந்து. கீழ் நான்கு – ஈசன், அரன், மால், அயன். (19).

திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி…,

அவனருளால் அவன் தாள் வணங்கும்

Leave A Reply

Your email address will not be published.