அருவமாய் நிற்கும் சிவம்
ஒரு ஊரில் பரம்பரை அனுபவம் என்பதும் இல்லாமல், குருவை அணுகிக் பாடமும் கேளாமல்,
தானே ஓலைச் சுவடிகளைப் படித்து சுயமாக வைத்தியம் செய்யத் தொடங்கினான் ஒருவன்.
ஒத்தைத் தலைவலிக்கு “இரு குரங்கின் கைச்சாறு” தடவக் குணமாகும்’ என்று ஓலைச் சுவடியிலிருந்தது.
இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான்.
அப்போது அங்கே வந்த பெரியவர், “தம்பீ! என்ன இது?” என்று காரணம் கேட்டார். இவன் தான் ஒலையில் படித்த செய்தியைச் சொன்னான்.
அவனது அறியாமையைக் கண்டு இரங்கிய பெரியவர் சொன்னார்
தம்பி, “இரு குரங்கின் கைச்சாறு” என்பது மறைமொழி.
அது குரங்கின் சாறு அல்ல; “முசு” என்றால் “குரங்கு”.
இரு குரங்கின் கைச்சாறு என்றால் “முசுமுசுக்கைச் சாறு” என்பது பொருள்.
“இனி நீ வைத்தியம் செய்வதானால் அறிந்த அனுபவம் உள்ள பெரியோரை அணுகிக் கேட்டு, அவர் கைப்பாக முறையைத் தெரிந்து தொழில் செய்ய வேண்டும். நூலைப் படித்துத் தானே தெரிந்து, கொண்டதாக நினைப்பதும் தவறு.
பெரியோரை அணுகிக் கேட்க வெட்கப்படுவது தவறு.
நன்கு தெரிந்து தெளிந்து தொழில் செய்யவேண்டும் என அறிவுரை வழங்கிச் சென்றார்.
“குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்” என்கிறது ஒளவைக் குறள்.
குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே ராமன் , கிருஷ்ணன் போன்ற அவதார புருஷர்கள் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினர்.
சிவத்தை அடைய முற்றுப்பெற்ற மெஞ்ஞானக் குருவாகிய ஞானிகளை/ சித்தர்களை வழிபடுதலே முறை என்கின்றது தமிழ்மறையான திருமந்திரம்.
குரு துரோணர் கொடுத்த சிக்ஷையால் தான் மஹாபாரதத்தில் அர்ஜுனன் கௌரவர்கள் பக்கம் இருந்த தன் குருவையே எதிர்த்து போராட முடிந்தது.
இவற்றை கருத்தில் கொண்டு நோக்கினால்
“குரு இல்லாத வித்தை பாழ்” எனும் பழமொழி மிகையாகாது.
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே”!