திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய அருள்மிகு கச்சாலீஸ்வர
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய அருள்மிகு கச்சாலீஸ்வரர் (கச்சபேஸ்வரர்) திருக்கோயில், பாரிமுனை, சென்னை .
தல வரலாறு
பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், “கச்சபேஸ்வரர்’ என்றும், “கச்சாலீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
“கச்சபம்’ என்றால் “ஆமை’ என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார்.
ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தலபெருமை:
அம்பாள் அழகாம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் உள்ளனர். ஒரேநேரத்தில் இம்மூன்று சக்திகளையும் வணங்கினால் கல்வி, செல்வம், ஆற்றல் பெறலாம்.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னதி தீக்கிரையான போது, தமிழகத்தில் இருந்து புதிய சிலை எடுத்துச் செல்லப்பட்டது. அந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின்போது, இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது.
கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய தலம்..
சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணதோஷம் நீங்கும், நினைத்த செயல்கள் நடக்கும், அம்பாளுக்கு தைலக்காப்பு செய்து வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் :
சென்னை பாரிமுனை, அரண்மனைக்காரத் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால் கோயிலை அடையலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி