குரங்கணில்முட்டம்; அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்!

தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி!

0 57

குரங்கணில்முட்டம்; அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்!

இறைவர்: வாலீஸ்வரர், கொய்யாமலர் நாதர்.
இறைவியார்: இறையார் வளையம்மை.

ஸ்தல மரம்: இலந்தை மரம் , வில்வமரம்.
தீர்த்தம் : காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு). வாலி தீர்த்தம்

ஆலய வரலாறு

மேற்குப் பார்த்த சந்நிதியில் மூலவர் வாலீஸ்வரர் காட்சி அளிக்கிறார். குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றுக்கும் சாப விமோசனம் அளித்து ஆட்கொண்ட திருத்தலமானதால், இது ‘திருக்குரங்கணில்முட்டம்’ என அழைக்கப்படுகிறது.

வாலிக்கு திருவருள் புரிந்ததால் இறைவனுக்கு ‘வாலீஸ்வரர்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.

குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு ‘கொய்யா மலர் நாதர்’ (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு.

வினைப் பயன் காரணமாக வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டமாகவும் (காகம்) பூலோகத்தில் பிறப்பெடுத்தனர். தவத்தில் மேம்பட்ட ஆத்மஞானிகளான மகரிஷிகளின் சாபத்தால் அவர்களுக்கு இத்தகைய மிகக் கொடிய அனுபவம் நேரிட்டது. இதனால், மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று உமையொருபாகனான சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர். அவர்கள் மீது கருணை கொண்ட சிவபெருமானும், நினைத்தவுடன் முக்தி தரும் திருத்தலங்கள் ஏழினுள் சிறப்பு பெற்ற, காஞ்சியின் தென்பால் உள்ள திருக்குரங்கணில்முட்டம் தலத்தில் தான் நித்திய சானியத்துடன் எழுந்தருளி இருப்பதாகவும், அங்கு சென்று தன்னை வழிபட்டால் வினை நீங்கும் என்றும் கூறினார்.

சிவபெருமானின் கட்டளையை ஏற்று குரங்கின் வடிவில் இருந்த வாலி, திருக்குரங்கணில்முட்டம் தலத்துக்குச் சென்று இறைவனை வழிபட்டான். சிவனும் பார்வதியுடன் காட்சி தந்து வாலிக்கு அருள்பாலித்து சாப விமோசனம் அளித்தார்.

அடுத்து இந்திரனாகிய அணில் திருக்குரங்கணில்முட்டம் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட, பெருமானும் காட்சியளித்து வினையை நீக்கி அருள்பாலித்தார்.

அதன் பிறகு தர்மத்தை ரட்சிக்கும் எமதர்மனும் காகம் உருவில் வந்து தனது அலகினால் (மூக்கு) கீறி ஒரு திருக்குளம் உண்டாக்கி, அந்தப் புனித நீரினால் பல காலம் நீராடி சிவபெருமானை வழிபட்டு வந்தார். அதனால், உள்ளம் மகிழ்ந்த திருக்கயிலைநாதனும் எமதர்மனுக்கு உமாதேவியுடன் காட்சியளித்து வினையை நீக்கி அருள்பாலித்தார்.

குரங்கு, அணில், முட்டம் (காகம்) ஆகியவை வழிபட்ட வரலாறு ஆலயத்தின் முகப்பு வாசலின் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

ஆலய சிறப்புகள் :

“இத்தல இறைவன் ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர் பக்தர்கள்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இத்தலத்து இறைவனை வணங்குபவர்கள் வினைப்பயன்களாகிய துன்ப இன்பங்களை காணுதல் இல்லாதவர் ஆவர் என்றும், குரங்கணில்முட்டத்தை முறையாக வணங்குபவர், வினைகள் இல்லாதவர் ஆவர் என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் தனது கடைசிப் பாடலில், இறைவன் மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு (முக்தி பேறு அடைதல்) எளிதாகும் என்றும் குறிப்பிடுகிறார்.

சிறுவயதில் குழந்தைகளின் ஆயுளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் பாலாரிஷ்டம் என்ற தோஷம் இத்திருக்கோவிலின் காகப் புஷ்கரணியில் நீராடி வாலீஸ்வரரை தரிசிப்பதால் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

அம்பிகை என்றும் இளமையுடன் வளையல் அணிந்து காட்சி அளிப்பதால், இறையார் வளையம்மை என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள்.

ஆரோக்கிய குறைவினால் சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் ஏற்படும். இத்தகைய தோஷம், திருத்தலத்தின் அருள்பாலிக்கும் வளையம்மையின் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கும்.

எமதர்மனால் உண்டாக்கப்பட்ட காக்கை மடு தீர்த்தம் கொடிய நோய்கள், அர்ப்ப ஆயுளில் குழந்தை மரணம், கருச்சிதைவு ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் சிறப்புடையதாகும்.

இக்கோயிலில் 6 கல்வெட்டுகள் உள்ளன. அவை கோநேரின்மைகொண்டான், குலோத்துங்கன், இராஷ்டிரகூட கன்னரதேவன், கிருஷ்ணதேவராயர் இவர்கள் காலத்தவை. கல்வெட்டில் இத்தலம் ‘காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்’ எனக் குறிக்கப்படுகிறது.

இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார். இப்பகுதி மக்களிடையே ‘கொய்யாமலை’ என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம்.

இக்கோவிலுக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் இந்திய தொல்லியல் துறை பராமரிக்கும், பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.

கோயில் முகவரி :

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்,
குரங்கணில்முட்டம் கிராமம்,
தூசி அஞ்சல், செய்யாறு வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் 631 703.

கோயில் அமைவிடம் :

காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து பயணம் செய்யும்போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மீ. சென்றால், கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது.

குறிப்பு:
முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது. கே.எஸ் மணிகன்டன் சிவம், கைபேசி – 9894699095 .

தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணா மலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி!

 

Leave A Reply

Your email address will not be published.